மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் : இந்திய உதவியில் 10,000 வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் : இந்திய உதவியில் 10,000 வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல்

இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதே நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்ததோடு, தமிழ் சம்பிரதாய முறைமைகளுக்கமைய ஜனாதிபதிக்கு கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொட்டகலை, மவுன்டவுன் தோட்டத்தின் திம்புல கீழ்ப்பிரிவு பகுதியில் இந்திய உதவியில் ஆர்பிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் நிகழ்நிலை முறைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனையடுத்து அட்டன் தொழில்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூடம் மற்றும் கனிணிப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வும் நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால் இன்றைய நிகழ்வைக் கூட சாதகமாக நடத்தியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கும் என்றும், அவர்களுக்கான காணி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என்றும் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment