நாட்டுக்கு மருந்துகளை விநியோகம் செய்வது சம்பந்தமாக பெரும் சிக்கலான நிலையை உருவாக்கியுள்ள Isolez Bio Tech Pharm நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஓடர்களையும் உடனடியாக இடைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பில் குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விசாரணை நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ள அனைத்து கொடுப்பனவுகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தமாறும் அமைச்சர் மேற்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேற்படி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஓடர்கள் மற்றும் விநியோகத்திற்கு இணங்க அவற்றை ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த மருந்து விநியோக நிறுவனம் தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையால், குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டு தற்போது அது தொடர்பான விசாரணை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நிறுவனத்தினால் முறையற்ற விதத்தில் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகம், தலைவர் அரச மருந்து கூட்டுத்தாபனம் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment