பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளில் பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் சோதனையிட, தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரை புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கப்படுவதாகவும், பகிடிவதைக்கு அவர்கள் உள்ளாகுவதாகவும் கிடைத்த தகவலையடுத்தே, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சோதனை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்குபடுத்தல், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் வாகன வசதிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதன்போது தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளைத் தடுக்க தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கமைய துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க வட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணுக்கு கிடைக்கும் ஒவ்வொரு முறைப்பாடுகளும் உடனடியாக விசாரிக்கப்படுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment