(எம்.மனோசித்ரா)
ஆசியாவிலேயே மின் கட்டணம் உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கட்டணங்களையும், வரிகளையும் அதிகரிப்பதால் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தி விட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள 333 மில்லியன் டொலரை விட அதன் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரமே முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவிலேயே மின் கட்டணம் உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 பில்லியன் ரூபா எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததன் காரணமாக மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தென் ஆசியாவிலேயே உயர் மின் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும்.
நாட்டின் நிலைமை தொடர்பில் அடுத்த 100 நாட்களுக்கு ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்பு கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்காது.
பொருட்களின் விலை அதிகரிப்புடன், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. அடக்குமுறைகளால் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்படும் இந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல எந்தவொரு சர்வதேச அமைப்பும் உதவ முன்வராது.
இவற்றை மூடி மறைத்து ஊடகப் பிரிவின் ஊடாக எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும், அடுத்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.
கியூபா, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளதால் என்ன நன்மை கிடைத்துள்ளது? கடன் பெறுவதற்கும், வரி அறவிடுவதற்கும், நாட்டின் சொத்துக்களை விற்பதற்கும் மாத்திரமே அரசாங்கத்துக்கு தெரியும்.
மக்களின் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். உத்தேசத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவை அனைத்துக்கும் இந்த அரசாங்கம் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும்.
அடுத்த வருடம் தேர்தலுக்குரிய வருடமாகும். ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது. அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சில அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலங்கள் தோல்வியடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை 333 மில்லியன் டொலர் மாத்திரமேயாகும். அதனை விட அதிக தொகை அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே இங்கு நாணய நிதியத்தின் கடன் தொகையை விட, அதனால் சர்வதேசத்தின் மத்தியில் கிடைக்கும் நம்பிக்கையே முக்கியத்துவமுடையதாகும்.
இரண்டாம் கட்ட கடன் தொகை கிடைக்கப் பெற்றால் இலங்கை முதலீடுகளுக்கு சிறந்த நாடு என்ற அங்கீகாரம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதை விடுத்து, கட்டணங்களையும் வரிகளையுமே அரசாங்கம் அதிகரித்துள்ளது. அவற்றை அதிகரிப்பதால் நாணய நிதியத்தை திருப்திப்படுத்திவிட முடியாது.
No comments:
Post a Comment