கந்தளாய் மத்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்கு இடங்களில் அமைந்துள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டுகளுக்கு சேதம் விளைவித்த நபர் ஒருவர் கந்தளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து நீதிவான் தினிது சமரசிங்க அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் உத்தரவுக்கு உள்ளாக்கப்பட்டவர் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 32 வயது நபராவார்.
பொலிஸ் விசாரணையில் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு புத்தர் சிலைகளின் கண்ணாடிக் கூண்டுகளுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் அதனை வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலூன்னா ரஜமகா விகாரையின் பிரதான வீதியில் அமைந்துள்ள புத்தர் சிலை, போடன் காடுவ, ரஜஎல சீவலி வித்தியாலயத்துக்கு அருகில் மற்றும் ரஜஎல யுனிட்டி புத்தர் சிலை என்பவற்றின் கண்ணாடிக் கூண்டுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ‘பி’ அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தாக்குதல் பற்றிய செய்தி வெளிவந்ததும் கந்தளாய் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் கந்தளாய் ஜம்இய்யத்துல் உலமா கிளை பிரதிநிதிகள் கந்தளாய் பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் தங்கள் கவலையை வெளியிட்டனர்.
சிதைவுக்குள்ளான புத்தர் சிலைகளின் கண்ணாடிக் கூண்டுகளை மீளமைத்து தருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 21ஆம் திகதி அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொலிஸாருடனான சந்திப்பில் கந்தளாய் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஏ. நஸார் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா கந்தளாய் கிளையின் சார்பில் மௌலவி எம்.ஆர்.ஜே.எம். ஜெஸீல் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பவம் இடம்பெற்றதன் பின்பு கந்தளாய் பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படாத வண்ணம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் உலமா சபையின் கந்தளாய் கிளை பிரதிநிதிகளும் விரைந்து செயற்பட்டனர். அப்பகுதியிலுள்ள நான்கு பௌத்த விகாரைகளுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு அப்பகுதியில் சமாதானத்தை உறுதி செய்தனர்.
கந்தளாயில் அசம்பாவிதமேதும் நிகழாவண்ணம் பொலிஸாரும், பௌத்த மதகுருமாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக உலமா சபை கந்தளாய் கிளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் அவரது மனைவி வெளிநாட்டில் பணி புரிவதாகவும் கூறினார்.
Vidivelli
No comments:
Post a Comment