இலங்கை அணிக்கு உற்சாகமூட்டி வந்த பிரபல ஆதரவாளர் பேர்சி அபேசேகர காலமானார்.
இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளுக்கு தவறாது சென்று, உற்சாகமூட்டி வந்த சிரேஷ்ட இரசிகர்களில் ஒருவரான பேர்சி அபேசேகர தனது 87ஆவது பிறந்தநாளை கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டாடியிருந்தார்.
பேர்சி அபேசேகர இலங்கை கிரிக்கெட் அணியின் நீண்டகால ஆதரவாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
அவர் அண்மைக் காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றையதினம் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் ‘அங்கிள் பேர்சி’ என அழைக்கப்படும் பேர்சி அபேசேகரவின் உடல் நலனுக்காக, கடந்த மாதம் (செப்டெம்பர்), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ரூ. 5 மில்லியன் நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1979 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேர்சி முதன்முறையாக சிங்கக் கொடியை ஏந்தி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தது.
இலங்கை அணியின் இன்னிங்ஸ் இவ்வாறு நிறைவுக்கு வந்த நிலையில், பேர்சி அபேசேகரவின் மரணச் செய்தியும் இவ்வாறு எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment