தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் காற்றுடனான காலநிலையைத் தொடர்ந்து கண் நோய் பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகையினால் இந்த நோய்த் தொற்று தொடர்பாக அனைவரையும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும், யாழ். மாவட்ட பொதுச் சுகாதாரப் பிரிவினர் நேற்று (05) அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, வடமராட்சியின் வலிகாமம் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருகின்றமை அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கண்கள் கடுமையாக சிவந்து, கண்களிலிருந்து நீர் வழிவதுடன், கண்களில் சிறியளவில் வலியும் காணப்படுகின்றமை இதற்கான நோய் அறிகுறிகளாகுமெனச் சுட்டிக்காட்டிய பொதுச் சுகாதாரப் பிரிவினர், கண் நோயினால் பாதிக்கப்படுகின்றவர்கள் சுத்தமான கைக்குட்டையை பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வெப்பமான காலநிலையில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கண்களில் தூசி படிய விடாமல் தவிர்த்துக் கொள்ளுமாறும், அவர்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
கண் நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி, உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்களை பொதுச் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment