போதைப் பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் : எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பலர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 4, 2023

போதைப் பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் : எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பலர்

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கண்டி வைத்தியசாலையின் விசேட மனநல வைத்தியர் கிஹான் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த தரவுகளில் வெளிப்படுத்தப்படாத அதிகளவானோர் சமூகத்தில் காணப்படலாம் என கருதுகின்றோம்.

புள்ளிவிபரங்களை நோக்கும்போது சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர் என்பதோடு இவர்களில் அதிக எண்ணிக்கையானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி அதன் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 16 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட சுமார் 28 வீதமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருள் உட்பட ஏதேனும் ஒரு வகை போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலைமை நாட்டில் பாரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடியது.

மேலும் பாடசாலையிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக போதைப் பொருள் மாத்திரைகள், தடுப்பூசிகள் சமூகத்தில் பாரியளவில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளும், 100 கிலோ 932 கிராம் ஹசீஸ் ரக போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment