வேகமாக பரவி வரும் கண்நோய் ! சில சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

வேகமாக பரவி வரும் கண்நோய் ! சில சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கண் நோயானது தற்போது வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதில், வேகமாக பரவி வரும் கண் நோயிலிருந்து (Viral Conjunctivitis) எம்மை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. மு.மலரவன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இக்கண் நோயானது 70 வீதமானவர்களுக்கு ஒரு கண்ணில் வந்தால் மற்றைய கண்ணிலும் வரும். வீட்டில் உள்ள ஒருவருக்கு இக்கண் நோய் வரும் பட்சத்தில் 25 வீதம் வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது.

குறித்த கண் நோயானது நேரடி தொடுகை மூலம் பரவக்கூடியது என்பதனால் பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுச் சந்தைகள் போன்ற அதிகளவானவர்கள் கூடும் இடங்களில் பரம்பல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்நோயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டிய ஒரு அவசர தேவை உணரப்படுகின்றது.

இந்நோயினைக் கட்டுப்படுத்துவது மிகவும் இலகுவானது. பின்வரும் சில சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தினை இரு வார காலப்பகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும்.

01. தொற்று ஏற்பட்ட (கண்நோய் ஏற்பட்ட) ஒருவர் பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்வதனை முற்றாக தவிர்த்து சாதாரண தனிமைப்படுத்தலில் (Isolation) இருத்தல் அவசியம். கண் சிவப்பு மறைந்து கண்ணில் இருந்து நீர் வடிதல் முற்றாக குணமடைந்த பின்னரே (3-5 நாட்கள் வரை) பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும்.

02. இந்நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்ணில் இருந்து வரும் நீரை கைகளினால் தொட்ட பின்னர் கைகளைக் கழுவாது வேறு ஒருவரையோ ஒரு பொருளினையோ தொடுவதனை முற்றாக தவிர்த்தல் அவசியம்.

03. கண் நோய் ஏற்பட்டவர்களோ அவர்களை பராமரிப்பவர்களோ அன்றி நோய் தொற்று ஏற்படாது முன்னெச்சரிக்கையாக சாதாரண பொதுமக்களோ அடிக்கடி கைகளினைச் சவர்க்காரமிட்டு நன்றாக கழுவுதல் வேண்டும்.

04. நோய் ஏற்பட்டவர்களும் சரி சாதாரண பொதுமக்களும் சரி எச்சந்தர்ப்பத்திலும் கண்களினைக் கசக்குவதனையோ கண்களை தேவையற்று தொடுவதனையோ முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

05. கண் நோய் பாதிப்புக்குள்ளானவர் பாவித்த துவாய், தலையணை, உணவுத் தட்டுக்கள், தேநீர் குவளைகள், கட்டில், கதிரை என்பவற்றை பாவிப்பதனை முடிந்தவரை தவிர்த்தல் முடியாத சந்தர்ப்பங்களில் தொற்றுநீக்கி கொண்டு சுத்தம் செய்த பின்னர் பாவித்தல்.

06. கண்களுக்கு லென்ஸ் பாவிப்பவர்கள் நோய் குணமடையும் வரை அதனைப் பாவிப்பதனைத் தவிர்த்தல் வேண்டும்.

07. நீச்சல் தடாகத்திற்கு செல்வதனை தொற்றுக்குள்ளானவர்கள் முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.

08. அடிக்கடி கைகளையும் முகத்தினையும் சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் குளித்து சுத்தமாக இருத்தல் வேண்டும்.

09. கண் நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு மருந்தினையும் கண்களுக்கு விடுவதனை முற்றிலும் தவிர்த்தல் அவசியம். கண் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையின்றி ஸ்ரீரோயிட் மருந்துகளோ (anti biotic) மருந்துகளையோ உள்ளெடுப்பதனை தவிர்த்தல் வேண்டும்.

10. எனினும் பாதிப்புக்குள்ளான கண்களுக்கு குளிரான ஒத்தடம் (Cold compression) மற்றும் செயற்கை கண்ணீர் (Artificial Tears) பாவிக்க முடியும்.

எனவே அனைவரும் யாழ் மாவட்டத்தில் இக்கண் நோயின் பரம்பலை இரண்டு மூன்று வாரங்களுக்குள் கட்டுப்படுத்த மேற்கூறிய சுகாதார அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் தமது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.

No comments:

Post a Comment