ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.
ஹாபிஸ் நசீர் அஹமட், உட்பட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் தீர்மானத்தை மீறி, இலங்கை அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதனையடுத்து, அவர்கள் மூவரும் கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்ததோடு, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தது.
இதனையடுத்து ஹாபிஸ் நசீர் தவிர்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், மக்களின் நலன் கருதி வரவு செலவுத் திட்டத்துக்கு தாம் ஆதரவளித்ததாக கட்சிக்குத் தெரியப்படுத்தியதோடு, தமது செயற்பாட்டுக்காக மன்னிப்பும் கோரினர் என அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கூறுகின்றார்.
ஆனால், ஹாபிஸ் நசீர் உரிய விளக்கத்தை வழங்கத் தவறியிருந்தார். எனவே, அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக, கடந்த 2023 ஏப்ரல் 22ஆம் திகதி, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.
நபரொருவர் எந்தக் கட்சியினூடாக அல்லது சுயேச்சைக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானாரோ, அந்தக் கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் அவரின் அங்கத்துவத்தை இழந்தால், அந்த தினத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமல் போகும் என அரசியலமைப்பின் பிரிவு 99(13)(அ) கூறுகின்றது.
எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தான் நீக்கப்பட்டமையானது சட்டப்படி செல்லுபடியாகாது என அறிவிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் வழக்கொன்றை ஹாபிஸ் நசீர் அஹமட் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டப்படி செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தில் சுற்றாடல்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோயுள்ளது.
நடந்தது என்ன?
முஸ்லிம் காங்கிரஸுக்கு அந்தக் கட்சியின் தலைவரையும் சேர்த்து 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் 'மரம்' சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர் ஹாபிஸ் நசீர் அஹமட். ஏனைய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து, அந்தக் கட்சியின் 'தொலைபேசி' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
முன்ளாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஷவின் அரசாங்கம் அமைந்ததிலிருந்து தற்போதுவரை, முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே செயற்பட்டு வருகிறது. ஆயினும் அந்தக் கட்சியின் தலைவர் தவிர்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல தடவை கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடுகளை நாடாளுமன்றத்தில் எடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியிலே நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 2021 நவம்பர் 22ஆம் திகதி நடைபெறவிருந்தது.
அதற்கு முன்தினம் கூடிய முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக, தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும், அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளக்கூடாது எனும் தீர்மானத்தை எடுத்தது.
அன்றைய உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் மற்றும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். தௌபீக் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபிஸ் நசீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அன்றைய உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆயினும் கட்சியின் தீர்மானம் குறித்து, உச்சபீட கூட்டத்துக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் அன்றையதினமே தெரியப்படுத்தியதாக கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறுகிறார்.
இருந்தபோதும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மறுநாள் நடைபெற்றபோது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எதிராக வாக்களித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரசின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபிஸ் நசீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகிபோர், அன்றைய வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து, கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகள் இடைநிறுத்தப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
ஹாபிஸ் நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராகவும், எச்.எம்.எம். ஹரீஸ் பிரதித் தலைவராகவும், பைசல் காசிம் பிரதி அமைப்பாளராகவும் அப்போது பதவி வகித்தனர்.
மேலும், கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக நடந்து கொண்டமை தொடர்பில், மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கடிதம் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம் கோரியது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், மக்களின் நலன் கருதி வரவு செலவுத் திட்டத்துக்கு தாம் ஆதரவாக வாக்களித்ததாக கட்சிக்கு அறிவித்ததோடு, கட்சியின் முடிவுக்கு மாறாக நடந்து கொண்டமை தொடர்பில் மன்னிப்புக் கோரியதாக செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறினார்.
"ஆனால், ஹாபிஸ் நசீர் அஹமட் எந்த விளக்கமும் தராமல் மூன்று தடவை தொடர்ச்சியாக கால அவகாசம் பெற்றுக் கொண்டார். ஆனாலும் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக ஏன் வாக்களித்தார் என்பதற்கு எந்தவித விளக்கத்தையும் அவர் வழங்கவில்லை. வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, தீர்மானமொன்றை கட்சி எடுத்தமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்தார்" என, நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர்தான், கட்சி அங்கத்துவத்திலிருந்து ஹாபிஸ் நசீரை நீக்குவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது.
நசீர் அஹமட் தொடர்ந்த வழக்கு
இதனையடுத்து கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் ஹாபிஸ் நசீர் அஹமட் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கில் எதிராளிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என 97 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
நீதியரசர்களான பி. பத்மன் சூரசேன, எஸ். துரைாஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கட்பட்டு வந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹாபிஸ் நசீர் தொடர்பான இந்த வழக்குத் தீர்ப்பு வெளியான தினமே, அவரை நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு கோரி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தாம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மூத்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
30 வருடங்களில் இல்லாத தீர்ப்பு
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில், வழக்குத் தாக்கல் செய்தவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை, 30 வருடங்களுக்குப் பின்னர் நடந்துள்ளது என, இந்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
1991ஆம் ஆண்டு ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது, பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களாகவும், அப்போது அமைச்சர்களாகவும் பதவி வகித்த லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க உள்ளிட்டோர் அந்த பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர். அதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியிருந்து அவர்கள் நீக்கப்பட்டார்கள்.
அந்தத் தீர்மானத்துக்கு எதிராக லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனாலும், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டப்படி சரியானது என, அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பின்னர் வந்த காலங்களில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது என்றே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வந்தது.
ஹாபிஸ் நசீர் - யார் இவர்?
முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளில் இருந்து ஹாபிஸ் நசீர் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், அதாவது, அவர் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்படுவதற்கு 05 நாட்களுக்கு முன்னர், கட்சியின் உடன்பாடின்றி கோடட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் சுற்றாடல்துறை அமைச்சராக அவர் பதவியேற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அப்போது பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், "நசீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலும் அதே அமைச்சர் பொறுப்பை ஹாபிஸ் நசீர் தொடர்ந்தும் விகித்தார்.
ஹாபிஸ் நசீர் அஹமட் ஒரு பொறியியலாளர். இலங்கையில் குறிப்பிடத்தக்க செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும் இவர் பதவி வகித்தார்.
BBC
No comments:
Post a Comment