2340/45ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை இரத்துச் செய்ய அனுமதி : சோளம் இறக்குமதி, திரிபோஷ உற்பத்தி தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்குமாறும் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

2340/45ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை இரத்துச் செய்ய அனுமதி : சோளம் இறக்குமதி, திரிபோஷ உற்பத்தி தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்குமாறும் பணிப்பு

2023 ஜூலை 13ஆம் திகதிய 2340/45ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறிவீட்டுச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழான கட்டளையை இரத்துச் செய்ய அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (03) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கட்டளையை இரத்துச் செய்வதற்குக் குழுவின் அனுமதி கிடைத்ததுடன், சோளம் இறக்குமதி மற்றும் திரிபோஷ உற்பத்தி தொடர்பில் முழுமையான அறிக்கையைத் தயாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன், பல வருடங்களாக உற்பத்தி இலக்கைவிட குறைந்தளவே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம், கேள்விக்கு ஏற்ற வகையில் போதுமானளவு திரிபோஷாவை தயாரிப்பதற்கு தேவையான மாற்றங்களை முன்மொழிவது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட வேண்டி இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆந் திகதிய 2332/ 14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் திரிபோஷ தயாரிப்புக்கான சோளத்தை இறக்குமதி செய்யும்போது, ஒரு கிலோவிற்கு ஏற்புடையதான 75 ரூபா விசேட வியாபாரப் பண்ட அறவீடு 25 ரூபாவாகக் குறைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குறைப்பு மே மாதம் 18 ஆந் திகதி முதல் தொடங்கும் ஒரு வருட காலத்திற்கு இந்தக் கட்டளை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்தக் காலம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதுடன், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சோளத்திற்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு 75 ரூபாவாகக் காணப்படும்.

இந்த விடயம் குறித்துக் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயம் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் முன்னர் வெளியிடப்பட்ட கட்டளையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது சிக்கலுக்குரியது எனக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் வினப்பப்பட்டதுடன், கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பன இது தொடர்பில் முன்னெடுப்புகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், திரிபோஷ தயாரிப்புக்குத் தேவையான சோளத்தை இறக்குமதி செய்ய உள்ள ஆலைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தனர். இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தலைமைத்துவத்தை வழங்கிச் செயற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிமல் லான்சா, ஹர்ஷன ராஜகருணா, இசுரு தொடங்கொட, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி மேஜர் பிரதீப் உந்துகொட, சஹன் பிரதீப் மற்றும் சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment