உள்ளூர் பைனஸ் பலகை உற்பத்திச் செலவைக் குறைக்குமாறு ஆலோசனை : இறக்குமதி செய்யும் பலகைகளுக்கான வரியை அதிகரிக்குமாறு முன்மொழிவு : காடுகளிலிருந்து பிரித்தெடுப்பதை வினைத்திறனாக்குவதற்கு புதிய முறை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

உள்ளூர் பைனஸ் பலகை உற்பத்திச் செலவைக் குறைக்குமாறு ஆலோசனை : இறக்குமதி செய்யும் பலகைகளுக்கான வரியை அதிகரிக்குமாறு முன்மொழிவு : காடுகளிலிருந்து பிரித்தெடுப்பதை வினைத்திறனாக்குவதற்கு புதிய முறை

இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் பயிர்கள் காணப்படுவதால், உள்நாட்டு பைனஸ் பலகைகளுக்கான செலவைக் குறைக்குமாறு அரச மரக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆலோசனை வழங்கியது.

அரச மாரக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பைனஸ் பலகைகளுக்கான செலவு மற்றும் உள்நாட்டுப் பைனஸ் பலகைகளை தயாரிப்பதற்கான செலவு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற் கொள்ளப்பட்ட போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைய, இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் 2,964 ஹெக்டயார்கள் காணப்படுவதாகவும், அதில் 750,000 கன மீட்டர் பலகையாக மாற்ற முடியும் என குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் ஒரு வருடத்துக்கு 15,462 கன மீட்டர், சுமார் 160 கோடி ரூபாய் பெறுமதியான பைனஸ் பலகை இறக்குமதி செய்யப்படுவதாக குழுவில் புலப்பட்டது.

தற்பொழுது 922 கோடி ரூபாய் பெறுமதியான 375,000 கன மீட்டர் பிரித்தெடுக்கப்பட்ட பலகைகள் காணப்படுகின்றதால் மேலும் பைனஸ் பலகைகளை இறக்குமதி செய்வது சிக்கலானது என குழு சுட்டிக்காட்டியது.

உள்நாட்டில் பிரித்தெடுக்கப்பட்ட பைனஸ் பலகைக்கான (2 கன மீட்டர் மரக்குற்றி) செலவு ஒரு கன மீட்டருக்கு சுமார் 115,000 ரூபவாக உள்ளதுடன், பைனஸ் பலகை ஒரு கன மீட்டர் இறக்குமதி செய்ய சுமார் 93,500 ரூபாய் செலவாவதாக இதன்போது புலப்பட்டது.

இலங்கை முகங்கொடுத்துவரும் அந்நியச்செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் பாரிய நிதி செலவு செய்து இந்நாட்டுக்கு பைனஸ் பலகை இறக்குமதி செய்வது சிக்கலாகக் காணப்படுவது துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, மரக் கூட்டுத்தாபன அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையை கருத்தில் கொண்டு, பைனஸ் தயாரிப்புக்கான செலவைக் மேலும் குறைக்குமாறு குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதற்கமைய, ஒரு வருடத்துக்கு சுமார் 75,000 கன மீட்டர் அளவிலான பைனஸ் மரங்களை வெட்டி, அவற்றை உள்நாட்டில் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அவ்வாறு செய்தால் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வருடாந்தம் 441 மில்லியன் ரூபாய் கிடைப்பதாகவும், இத்துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 503 மில்லியன் ரூபாவும், போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு 433 மில்லியன் ரூபாவும், பலகை பிரிப்பவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாவும் கிடைப்பதாக குழு வலியுறுத்தியது.

அத்துடன், மரக் கூட்டுத்தாபனத்தின் வருமானத்தை 331 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய முழு தேசிய ரீதியில் இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் முன்வைத்தது.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கேள்வியை அதிகரிப்பதற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பைனஸ் மரத்தின் உற்பத்தி செலவைக் குறைக்க குழு பல முன்மொழிவுகளை முன்வைத்தது.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் காடுகளிலிருந்து இருந்து பைனஸ் மரம் வெட்டும்போது செலுத்தும் 11,125.96 ரூபாய் தொகையை ரூ. 8,500 ஆக குறைப்பதற்கும், அரச மரக் கூட்டுத்தாபனத்தினால், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் காடுகளிலிருந்து வெட்டி விற்கப்படும் பைனஸ் மரங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25% இலாபத் தொகையை 10% ஆகக் குறைக்கவும் இதன்போது முன்மொழியப்பட்டது.

காடுகளிலிருந்து மரங்களைப் பிரித்தெடுக்க தகுந்த ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய, அரச மரக் கூட்டுத்தாபனம் மூலம் கொள்முதல் செய்ய மூன்று மாதங்கள் ஆகும் என்பதால், இதனைத் தவிர்ப்பதற்கு, அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் மீண்டும் பயிரிடுவதற்குத் தேவையான நிதியை நேரடியாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவினால் முன்மொழியப்பட்டது.

அத்துடன், தற்பொழுது காணப்படும் பைனஸ் மரங்களை வெட்டியதை அடுத்து, மீண்டும் பைனஸ் பயிரிடுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறுவதற்கும், அவ்வாறு பைனஸ் பயிரிடுவதானால் அதற்குப் பொருத்தமான பைனஸ் வகையை தேர்ந்துடுப்பது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், மீண்டும் பைனஸ் பயிரிடுவதற்குப் பொருத்தமான வகை தொடர்பான தகவல்களை குழுவில் சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான வருண லியனகே, திலக் ராஜபக்ஷ ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment