பௌர்ணமி தினமான இன்று (28) இலங்கை மக்களுக்கு பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு காணப்படு வகின்றது. மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் இதுபற்றி தெரிவித்துள்ளது.
இன்று (28) இரவு 11.32 (23:31:48) முதல் நாளை (29) அதிகாலை 3.56 (03:56:25) மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை பகுதியளவில் பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது.
அத்துடன், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு பசிபிக் பெருங்கடல், கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, இந்து சமுத்திரம், தென் பசிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம் ஆகிய பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமி தினத்தில், சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்கு இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் இவ்வேளையில் பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
முழு நிலவும் பூமியின் நிழலால் மறைக்கப்படும் போது முழுமையான சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும் போது பகுதியளவான சந்திர கிரகணமும் நிகழும்.
பகுதியளவான இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இன்று (28) இரவு 11.32 மணிக்கு ஆரம்பமாகிறது.
தொடர்ந்து 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 37 செக்கன்கள் நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் நாளை (29) அதிகாலை 1.05 மணிக்கு அரைவாசி அளவிலும், அதன் உச்ச கட்டம் அதிகாலை 1.44 மணிக்கு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது
இச்சந்திர கிரகணம் அதிகாலை 3.56 மணிக்கு நிறைவடையும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment