மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்ற சிந்தனை எமது ஆட்சியாளர்களுக்கு ஏன் வருவதில்லை - ஜகத் குமார - News View

About Us

About Us

Breaking

Monday, September 4, 2023

மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்ற சிந்தனை எமது ஆட்சியாளர்களுக்கு ஏன் வருவதில்லை - ஜகத் குமார

(எம்.வை.எம்.சியாம்)

சர்வதேச நாணய நிதியமோ அல்லது உலக வங்கியோ இந்த அரசாங்கத்தை நியமிக்கவில்லை. நாட்டு மக்களே நியமித்தனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்தவுடன் மக்கள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என ஆட்சியாளர்கள் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை எமது ஆட்சியாளர்களுக்கு ஏன் வருவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்பதால் நாம் அதனை எதிர்த்தோம்.

அரசாங்கம் என்ற வகையில் உலக சந்தையின் விலைக்கு ஏற்ப விலைகளை அதிகரித்தால் மக்கள் மீது பாரியதொரு சுமையை சுமத்துகிறோம் என்று அர்த்தமாகும்.

உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்நாட்டு சந்தையிலும் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எமக்கு பொறுப்பு கிடையாது.

உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப விலை அதிகரிக்கப்படுவதாக கூறினாலும் அந்த விலை இரண்டு அல்லது மூன்று மடங்குகளாக அதிகரிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியமோ அல்லது உலக வங்கியோ இந்த அரசாங்கத்தை நியமிக்கவில்லை. நாட்டு மக்களே நியமித்தனர்.

விசேடமாக சிறு வருமானங்களை பெரும் மக்கள், சிறுநீரக கொடுப்பனவுகளை பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறும் தரப்பினர், சமுர்த்தி கொடுப்பனவுகள், விசேட தேவையுடையோர் மற்றும் வேறு நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறவில்லை.

ஜூன், ஜூலை மாதங்கள் நிறைவடைந்து தற்போது செப்டம்பர் மாதமும் ஆரம்பித்துள்ளது. இந்த நான்கு மாதங்களும் வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்துவது எவ்வாறு? மறுபக்கத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்தவுடன் மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என ஆட்சியாளர்கள் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை எமது ஆட்சியாளர்களுக்கு ஏன் வருவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுகிறது என்றார்.

No comments:

Post a Comment