ஜனாதிபதி அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று புதன்கிழமை (27) அதிகாலை ஜேர்மனுக்கு சென்றுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், சிறுவர், மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 28 முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ‘பேர்லின் பூகோள உரையாடலின்’ முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனிக்கு பயணமாகியுள்ளார்.
உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக அரசியல், வர்த்தக மற்றும் சமூக ரீதியில் செல்வாக்கு மிக்கவர்கள் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டின் பின்னர் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான ‘பேர்லின் குளோபல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment