உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை - எஸ்.பி. திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 26, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை - எஸ்.பி. திஸாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சனல் 4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்த தாக்குதல் சம்பவத்தை கோத்தாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சனல் 4 செய்திச்சேவை வெளியிட்ட ஆவணப்பட தொகுப்பில் எந்த விசாரணையும் இல்லாமல் ஆராய்ந்து பார்க்காமல் ஈஸ்டர் தாக்குதல் தொடரபான குற்றச்சாட்டை கோத்தாபய ராஜபக்ஷ் மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக பல விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் பிரகாரம் இந்த தாக்குதல் தொடர்பில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைக்கும் சிந்தனை கொண்ட குழுவினாலே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இதில் சஹ்ரான் ஹசீமின் தேசிய தெளஹீத் ஜமாஅத் இணைந்து கொண்டிருந்தது. சஹ்ரானுக்கு வழிகாட்டியது தற்போது சிறையில் இருக்கும் நவ்பர் மெளலவி என்ற நபராகும். இந்நிலையிலேயே 2014 இல் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் உலக முஸ்லிம் ராஜ்ஜியம் என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.

எமது நாட்டில் இந்த தாக்குதல் 2019 இல் இடம்பெறுவதற்கு முன்னர் 11 சம்பவங்கள் இடம்பெற்றன. நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் தொடர்பு கொண்டு ஐ.எஸ். தொடர்பாக பல தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தகவல்கள் மூலமே தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியா எமது பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கி இருந்தது. ஆனால் எமது பாதுகாப்பு சபையில் இருந்த குழப்ப நிலை காரணமாக இந்த இரகசிய தகவலை சரியான முறையில் ஆராயாமல் இருந்ததன் பலனாகவே இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போயிருக்கிறது.

அதனால் ஈஸ்டர் தாக்குதலுக்கும் கோத்தாய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியும் எமக்கு அதனை தடுக்க முடியாமல் போயிருக்கிறது.

அத்துடன் அபூஹிந் என்பது இந்திய புலனாய்வு பிரிவு சஹ்ரான் மற்றும் சிலருடன் கலந்துரையாட பயன்படுத்திய சொல். அதேபோன்றே சொனிக் சொனிக் வார்தையும்.

எனவே இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நானும் அந்த அரசாங்கத்தில் இருந்தவன். என்றாலும் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment