ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைப்புக்கு உள்நாட்டுக் காரணங்கள் எதுவுமில்லை - பிரமித்த பண்டார தென்னக்கோன் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 3, 2023

ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைப்புக்கு உள்நாட்டுக் காரணங்கள் எதுவுமில்லை - பிரமித்த பண்டார தென்னக்கோன்

ஆர்.ராம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இரு தரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தபோதும், வெள்ளிக்கிழமை (01) இரவு திடீரென அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய்க்குழாய் திட்டத்தையும் பார்வையிடுவதாக இருந்தது.

எனினும், குறித்த எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு உள்நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட பல தரப்புக்களாலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

விசேடமாக, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும எண்ணெய்க்குழாய் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாகவும் அதற்காக 624 சதுர மைல் பரப்பை வழங்கவுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், 144 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி உள்நாட்டு எதிர்ப்புக்கள் காரணமாகவா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்டதா, இல்லை வேறெந்த இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வான விஜயம் மேற்கொண்டு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டபோதும், இறுதி தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவரது விஜயம் பிற்போடப்பட்டிருப்பதாக எமக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன.

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை.

மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் விரைவில் இடம்பெறவுள்ளதோடு, இரு நாடுகளும் பொருத்தமான திகதியையும் உறுதி செய்யவுள்ளன என்றார்.

No comments:

Post a Comment