பெருந்தொகை பணப் பரிசுகளுடன் நிறைவு பெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி - News View

About Us

About Us

Breaking

Friday, September 8, 2023

பெருந்தொகை பணப் பரிசுகளுடன் நிறைவு பெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி

சவூதி அரேபியாவின் மறைந்த மாமன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடா வருடம் நடைபெறும் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 43 தடவையாக புனித மக்காவில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 10 நாட்கள் நடைபெற்ற இச்சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புனித மக்கா நகரில் நேற்றுமுன்தினம் (06.09.2023) நடைபெற்றது.

இலங்கை உட்பட உலகின் 117 நாடுகளில் இருந்து 166 ஹாபிழ்கள் (அல் குர்ஆனை மனனம் செய்தவர்கள்) போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் இரு வழி விமான டிக்கட் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட மற்றும் உணவு வசதிகள் போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்த சவூதி அரேபியா புனித உம்ரா செய்ய சந்தர்ப்பத்ததையும் புனித ஸ்தலங்களை தரிசித்தல், மதீனாவில் புனித அல்குர்ஆனை அச்சிட்டு விநியோகிக்கும் மன்னர் பஹ்த் அல்குர்ஆன் அச்சகம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தரிசிக்கவும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அத்தோடு இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெறுமதியான பணப் பரிசில்களையும் ஏனைய போட்டியாளர்களுக்கு பெறுமதியான ஆறுதல் பரிசில்களையும் வழங்கி கௌரவித்துள்ளது.

இச்சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை தட்டிக் கொண்டவர்களுக்கு பிரமாண்டமான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

முதல் பிரிவு அல்குர்ஆனை முழுமையாக மனனமிடுவதுடன் அல்குர்ஆனை ஏழு முறைகளில் ஓத தெரிந்தவர்களுக்கானதாக அமைந்திருந்தது.

அந்த வகையில் இச்சர்வதேச போட்டியில் இலங்கையில் இருந்து கல்ஹின்ன, ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் மாணவர் முஹம்மட் சிபான் முஹம்மத் சாஜித் கலந்துகொண்டார். அவர் இப்போட்டியில் பெறுமதியான ஆறுதல் பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இப்பரிசளிப்பு விழா மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் நேரடி கண்காணிப்பில் மக்கா இளவரசர் பத்ர் பின் ஸுல்தான் மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெறுமதியான ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு வெற்றி பெற்ற 18 அதிஷ்டசாலிகளுக்கு இலங்கை நாணயப்படி 40 கோடி ரூபாய்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவர்களில் முதல் வெற்றியாளர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அய்யூப் அப்துல் அஸீஸ் அல் வுஹைபி என்பருக்கு இலங்கை நாணயப்படி 5 கோடி ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அல் ஜீரியாவைச் சேர்ந்த ஸஷத் ஸலீம் என்பவருக்கு இலங்கை நாணயப்படி நான்கரைக் கோடி ரூபாவும், மூன்றாம் இடத்தைப் பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அபுல் ஹஸன் நஜ்ம் என்பவருக்கு இலங்கை நாணயப்படி 4 கோடி ரூபாவும் வழங்கப்பட்டது.

ஏனைய வெற்றி பெற்றவர்கள் பஹ்ரைன், சிரியா, சோமாலியா, சுவீடன், பங்களாதேசம், இந்தோனேசியா, லிபியா, செனகல், உகண்டா, லாயோனியா, இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த இறுதி வெற்றியாளருக்குக் கிடைத்த பரிசுத் தொகை இலங்கை நாணயப்படி 60 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் அல்குர்ஆனுக்கும் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய அனைத்து கண்ணியங்களையும் கௌரவங்களையும் சவுதி அரேபிய அரசாங்கம் அன்று தொட்டு இன்று வரை வழங்கி வருகிறது.

அல்குர்ஆனின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் மகத்தான பணியை சவுதி அரேபிய அரசு தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றது. அதற்காக பல தேசிய சர்வதேச குர்ஆன் மனனப் போட்டிகளை உலக நாடுகளிலும் புனித மக்காவிலும் தொடர்ந்தும் செய்து புனித அல்குர்ஆனுக்கு மகத்தான சேவைகளைச் செய்து வருவது அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சவுதி அரேபியாவின் மறைந்த மாமன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடா வருடம் புனித மக்கா நகரில் சர்வதேச குர்ஆன் மனனப்போட்டி நடாத்தி பல கோடி ரியால்கள் பரிசில்களை அள்ளி வழங்கும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோர் உலக முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதோடு சவுதி அரசுக்கு நன்றிகளையும் பாராட்டுதல்களையும் அவர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அஷ்-ஷைக் பெளஸுல் அலவி (மதனி)
செயலாளர்,
தாருல் ஈமான் நிறுவனம், கொழும்பு-03

மெளலவி எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி),
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு

No comments:

Post a Comment