கெளரவமான சேவையாக கட்டியெழுப்ப அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் : மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 28, 2023

கெளரவமான சேவையாக கட்டியெழுப்ப அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் : மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரச சேவையில் இருக்கும் சிறியதொரு குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக அரச சேவை தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அதனால் அரச சேவையை கெளரவமான சேவையாக கட்டியெழுப்ப அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச சேவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அரச துறையில் இருக்கும் ஒரு சிலரின் செயற்பாடே இதற்கு காரணமாகும்.

அதனால் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த எண்ணத்தை மாற்றியமைத்து அரச சேவை தொடர்பாக கெளரவமானதொரு விம்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது அரச ஊழியர்கள் அனைவரதும் பொறுப்பாகும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுவதில்லை. என்றாலும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுததுச் செல்வதற்காக நீதி அமைச்சில் சில துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்திருக்கிறோம்.

அதனால் கெளரவமான அரச சேவையை நீதி அமைச்சுக்கு கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் உயர்ந்த சேவையாக வழங்க நடவடிக்கை எடுத்து அரச சேவையில் உயர்ந்த இடத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரச ஊழியர்களாக எமது உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் அரச சேவைக்கு எங்களால் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதா என சிந்தித்து பார்க்க வேண்டும்.

எமது நாட்டில் அதிகமானவர்கள் தங்களின் உரிமைகள் தொடர்பாக பேசினாலும் சில தொழிலாளர்கள் சரியான முறையில் வரி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் நாட்டை கட்டியெழுப்ப எமது பொறுப்புகள் என்ன என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment