முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் : சி.ஐ.டியிடம் உடனடி விசாரணையை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் : சி.ஐ.டியிடம் உடனடி விசாரணையை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

ஆர்.ராம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தான் வகித்த பதவிகள் அனைத்தையும் துறந்து உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

உண்மையில், அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதா, அவ்வாறு காணப்பட்டால் அது யாரால் விடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் யாவை என்பன தொடர்பில் விரிவான விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நீதித்துறையின் சுயாதீனத்தையும், நன்மதிப்பையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

ஆகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தில் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுத்து மூலமான கோரிக்கையையும் அனுப்பி வைக்கவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment