சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 15, 2023

சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (14) காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை துரத்திச் சென்ற மூன்று பொலிஸார்களில் இரண்டு பொலிஸார் மீண்டும் 8.30 மணியளவில் அவ்விடத்தில் ஒன்று கூடிய நிலையில் ஒரு பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment