ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியது.
ஆசிரிய ஆலோசகர் சேவையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தச் சிக்கல்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் பங்குபற்றலில் அந்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் கலந்துரையாட வேண்டும் என அதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
அதற்கமைய, ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க குழுவில் விடயங்களை முன்வைத்தார்.
கல்வி அமைச்சரும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் இரண்டு சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரிய ஆலோசகர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சரிக்கட்டல் கொடுப்பனவை சம்பள ஏற்றமாக வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
மேலும், ஆசிரிய ஆலோசகர் பணிகள் தொடர்பில் ஆலோசனை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது புலப்பட்டது.
அத்துடன், ஆசிரிய ஆலோசகர்கள் வலயத் தொழிநுட்ப குழுக்களின் அங்கத்தவராக அந்தக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஆசிரிய ஆலோசகர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் சாதகமான பதில் வழகியுள்ளதாகவும் இதன்போது புலப்பட்டது.
ஆசிரிய ஆலோசகர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சரிக்கட்டல் கொடுப்பனவை சம்பள ஏற்றமாக வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை விரைவாகப் பெறுவதற்கு உத்தேச அமைச்சரவைப் பத்திரத்தை விரைவாக முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க, ரோஹிணி குமாரி விஜேரத்ன, குலசிங்கம் திலீபன், அசங்க நவரத்ன, முதிதா பிரசாந்தி, மாயாதுன்ன சிந்தக அமல், மஞ்சுளா திசாநாயக்க, பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அத்துடன், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, ஜே.சி. அலவதுல, கபில அத்துகோரல, குமாரசிறி ரத்நாயக்க, ராஜிகா விக்ரமசிங்க ஆகியோரும் குழுவின் தலைவரின் அனுமதிக்கு அமைய கலந்து கொண்டனர்.
அரச சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சு, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிருவாகம் மற்றும் அனைத்து மாகாணக் கல்வி திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும், ஆசிரிய ஆலோசகர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment