ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், என்னுடன் கடமை புரிந்த உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பினால் செவ்வனே எனது மக்கள் பணியை நான் மாவட்டத்திற்கு ஆற்ற முடிந்திருந்தது, அதனால் மனநிறைவுடன் எனது 32 வருட அரச பணியில் இருந்து ஓய்வில் செல்கிறேன் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
32 வருடங்கள் அரச சேவையை பூர்த்தி செய்து வெள்ளிக்கிழமையுடன் 29.09.2023 அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
1991 ஆம் ஆண்டு அரச நிருவாக சேவையில் தனது அரசு பணியை தொடங்கிய கலாமதி பத்மராஜா, அம்பாறை மாவட்டத்தில் தமது முதல் நியமனத்தை பெற்றுக் கடமையை ஆரம்பித்ததுடன், பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்று தமது கடமையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் பிரதேச செயலாளராக மாவட்டத்தின் மண்முனை வடக்கு உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றி, பின்னர் நிருவாக சேவையில் பதவி உயர்வு பெற்ற அவர் மாகாண அமைச்சிற்கு நியமிக்கப்பட்டு அங்கு 10 வருடங்கள் பல்வேறு அமைச்சுகளின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றியிருந்தார். மீண்டும் மாகாண சபையில் கடமையாற்றி, இவ்வாண்டு தை மாதம் 17 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மீளவும் நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த நிலையில் 60 வயது பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்வில் செல்கிறார்.
மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியான கள்ளியங்காடு முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், ஜும்ஆப் பள்ளிவாசல், ஸாஹிறா வித்தியாலயம் என்பன அமைந்திருந்தது. இந்தக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் 1990ஆம் ஆண்டு இனச் சுத்திகரிப்புச் செய்து பூண்டோடு விரட்டப்பட்டார்கள்.
எனினும் நிலைமை சுமுகமாகியதன் பின்னர் அந்தக் கிராமத்தில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேற வந்தபொழுது அவர்களின் மீள் குடியேற்றதைத் தடுத்து அந்தக் கிராமத்தில் இருந்த முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசலை பிரம்மகுமாரிகள் இல்லம் என இந்து தியான இல்லமாக மாற்றியதோடு அங்கிருந்த ஸாஹிறா வித்தியாலயத்தை அருணோதய வித்தியாலயமாக மாற்றி ஒரு முஸ்லிமைக்கூட அங்கு குடியிருக்காமல் ஆக்கிய பெருமை இந்த அரசாங்க அதிபரையே சாரும் என்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment