இராஜினாமா, பின்னணி குறித்து ஆராய்ந்து வருகிறோம் : நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை - சாலிய பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 30, 2023

இராஜினாமா, பின்னணி குறித்து ஆராய்ந்து வருகிறோம் : நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை - சாலிய பீரிஸ்

(நா.தனுஜா)

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் 'தியாக தீபம்' திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிக முக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டு பதவி விலகியிருப்பதுடன் நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் கொழும்பில் நேற்றையதினம் (29) காலை சட்டத்தரணிகள் கூட்டிணைவின் சந்திப்பொன்றும், மாலை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது.

அதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் ஒன்றுகூடி இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment