ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் : விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 12, 2023

ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் : விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு சமர்ப்பித்த அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.

சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார். அரசாங்கமும் அதற்கு இணக்கம் தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தேசிய புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்படும்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அப்போதைய அரசாங்கத்துக்கு உரிய தகவல்களை வழங்கியுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுக்கு இடையிலான முரண்பாட்டினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதனை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பகிரங்கமாக செயற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாங்கள் குறிப்பிட்டபோது பலர் எம்மை இனவாதிகளாக விமர்சித்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பெரும்பாலானோர் உறுப்பினர்களாக அங்கம் வகித்தார்கள். ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு முழுமையான அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஆகவே சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு சமர்ப்பித்த தெரிவுக்குழு அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment