உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று சந்தேகம் கொள்வதற்கு பல காரணிகள் உள்ளன - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று சந்தேகம் கொள்வதற்கு பல காரணிகள் உள்ளன - கபீர் ஹாசீம்

(எம்.ஆர்.ஆர்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று சந்தேகம் கொள்வதற்கு பல காரணிகள் உள்ளன. 52 நாள் அரசியல் நெருக்கடியின்போது 'பிளேன் ஏ' தோல்வியடைந்ததை தொடர்ந்து 'பிளேன் பி' க்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனவாதம், மதவாதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த தரப்பு மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த் ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியமாகும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம்.

தேசப்பற்று, மதம், இனம் தொடர்பில் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்பிலேயே சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில் செனல் 4 விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

செனல் 4 விவகாரத்தில் அசாத் மௌலானா என்பவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர். இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டு கட்சியாகும். பிள்ளையான் அதில் இருக்கின்றார். அந்தக் கட்சியின் மாகாண சபை வேட்பாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராகவும் அசாத் மௌலானா இருந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட இன்னும் காரணங்கள் உள்ளன. அதன்படி தான் பதவிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறினாலும் 3 வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் சஹ்ரான் குழுவுக்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையிலான தொடர்பு இவர்களுக்கு இடை தரகர்களாக செயற்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தினர். இதனால்தான் அவர்களை இடமாற்றம் செய்தனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா?

2018 நவம்பர் மாதத்தில் வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சஹ்ரான் குழுவே கொன்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும் புலனாய்வு குழுவினர் ராஜபக்‌ஷக்களுக்காக செயற்பட்டவர்கள் அதனை விடுதலைப் புலிகள் மேல் சுமத்தினர்.

அன்று பொலிஸாருக்கு தாக்குதல் நடத்தப்பட்ட ஆயுதத்திலேயே அன்று மாவனெல்லையில் எனது செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா? அன்று வனாத்தமுல்லையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பிலும் சி.ஐ.டி விசாரணைகள் திசை திருப்பப்பட்டன. இதனால் எங்களின் சந்தேகங்கள் சரியானதே. இதனால் இவற்றை செய்ய வேண்டும்.

இதேவேளை 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக திருட்டுத் தனமாக மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அதுவே அவர்களின் 'பிளேன் ஏ' அது தோல்வியடைந்தது. அதன் பின்னர் மாவனெல்லையில் புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு கூறியும் அதனை செய்யவில்லை. இதனால் விசாரணைகளை மூடி மறைக்க திட்டமிட்டு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகங்களுக்கு காரணங்கள் இருக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment