காத்தான்குடி கடற்கரை பால நிர்மாணப் பணிக்கான 25 மில்லியன் ரூபா போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட காத்தான்குடி கடற்கரை றிஸ்வி நகர் பிரதேச பாலமும் வீதியும் மிக நீண்ட காலமாக நிர்மாணம் செய்யப்படாமல் காணப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இப்பிரதேசத்தில் இருந்த அரசியல்வாதிகள் இந்த பால நிர்மாணப் பணியினை செய்யாது புறக்கணித்திருந்தனர்.
இப்பால நிர்மாணத்தின் முக்கியத்துவம் தொடர்பாக காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பிரதேசத்திலுள்ள மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அமைப்புகள் கடந்த 2021 ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட்டிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதற்கு அமைய அமைச்சரின் வேண்டுகோளிற்கினங்க கடந்த 2021 ஆண்டில் இதற்கான மதிப்பீட்டறிக்கை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தபோதும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இவ்வேலைகள் ஆரம்பிப்பது தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சரின் தொடரான முயற்சியின் பயனாக கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி இப்பால நிர்மாணத்துக்கான மீள் மதிப்பீட்டறிக்கை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக தற்போது ரூபா 25 மில்லியன் இப்பால நிர்மாணத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பாலத்தை நிர்மாணம் செய்வதன் மூலம் காத்தான்குடிக்கும் பூநொச்சிமுனைக்கும் இடையிலான போக்குவரத்து எளிதாகுவதுடன் இப்பிரதேசத்தில் உள்ள மீனவர்கள் பெரும் நன்மை அடைய முடியும்.
அதேபோன்று, காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு இவ்வேலைத்திட்டம் மிகுந்த பங்களிப்பு மிக்கதாக அமைவதுடன் ஒட்டு மொத்தமாக இப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு முக்கிய செயற்பாடாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேலைத் திட்டத்தினை மிக அவசரமாக கவனம் எடுத்து நிதி ஒதுக்கீட்டினை பெற்று தந்துள்ள சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பணிக் குழாத்தினருக்கும் பிரதேச மக்கள் மீனவர் அமைப்புக்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைப்புகள் என்பன நன்றிகளை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
No comments:
Post a Comment