(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை திகதி இன்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் 56ஆவது கட்சி சம்மேளனத்தை எதிர்வரும் 10ஆம் திகதி நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக கட்சி சம்மேளனத்தை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சி முகாமைத்துவ குழு கலந்துரையாடியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கட்சியின் முகாமைத்துவ குழு ஓரிரு தினங்களில் கூட இருக்கிறது. இதன்போது கட்சி சம்மேளனத்தை கூட்டுவதற்கான திகதி தீர்மானிக்கப்படும்.
பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அல்லது அதற்கு அண்மித்த காலத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
கட்சி சம்மேளனம் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் தூரப்பிரதேசங்களில் இருந்து வரும் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன் சம்மேளனத்தை சிறப்பாக நடத்தி முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற விடயங்களை கருத்திற் கொண்டே பிற்போட தீர்மானித்தோம்.
கட்சி சம்மேளனத்தில் கலந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ஆதரவளர்கள், இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்காக எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment