ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் ராஜபக்ஷவினரை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப வேண்டாம் - பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் ராஜபக்ஷவினரை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப வேண்டாம் - பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் ராஜபக்ஷ்வினரை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப இடமளிக்க வேண்டாம். குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை கொண்டு வருபவர்கள் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது ஆட்சியில் இருந்தவர்களே.

இந்த தாக்குதல் தொடர்பில் இன்று பேசுபவர்கள் தாக்குதலுக்கு தேவையான திட்டமிடல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கின்றனர். அவ்வாறானால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றது அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கமே நாட்டில் ஆட்சியில் இருந்தது. அவ்வாறானால் அந்த ஆட்சியினரே அவர்களின் திட்டமிடலுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எனது மாவட்டத்திலும் சில பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இல்லை. பிள்ளைகளுக்கு பெற்றோர் இல்லை. கணவனுக்கு மனைவி இல்லை. மனைவிக்கு கணவன் இல்லை என பெரும்பாலானவர்கள் துயரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த தாக்குதலில் பலியானவர்கள் எவரும் பயங்கரவாதிகள் கிடையாது. தமது ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டவர்களே அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அதேவேளை ஹோட்டல்களில் உள்ள சாதாரண நபர்களும் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான படுகொலைகளை நாம் எவரும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் நிலைப்பாடொன்றை முன்னெடுத்துச் செல்கின்றனர். குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் நாம் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment