வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் - பிரதமர் தலைமையிலான ஆலோசனை குழுக்கூட்டத்தில் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் - பிரதமர் தலைமையிலான ஆலோசனை குழுக்கூட்டத்தில் இணக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாததால், அதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வாக, வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஏகமனதாக இணக்கம் வழங்கப்பட்டது. 

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (20) நடைபெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்த இணக்கம் வழங்கப்பட்டது. 

கள உத்தியோகத்தர்கள் தமது தேர்தல் அதிகாரப் பகுதியில் தேர்தலுக்கு போட்டியிடுவதற்குக் காணப்படும் தடைகள் மற்றும் அந்தத் தடைகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, திருத்தப்பட்ட சட்டமொன்று, திருத்துவதற்கு முன்னர் இருந்தது போன்று மீண்டும் மாற்றுவதற்குத் தேவையாயின், அதற்கு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையின் அனுமதி மற்றும் சர்வசன வாக்கெடுப்பும் தேவை என வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

அத்துடன், மாகாண சபை அமைச்சுக்களில் செயலர்களை இடமாற்றம் செய்யும் முறைமையை ஒழுங்குபடுத்தல் மற்றும் சேவை யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் பிரதேச செயலாளர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. 

மாகாண அரச சேவையில் அதிகாரிகளை முறையாக ஈடுபடுத்தாமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

அதற்கமைய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அதிகாரிகளையும் முறையாக ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அதற்கமைய, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார். 

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் புதிய தீர்மானம் இல்லை என்பதால், மாகாண மற்றும் மொத்த அரச சேவையில் வெற்றிடங்கள் காணப்படுவதாலும், அந்த வெற்றிடங்களை முகாமைத்துவ சேவை மூன்றாம் வகுப்பு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் உயர்ந்த புள்ளிகளை பெற்று தற்பொழுது நியமனம் பெற்றுள்ள அதிகாரிகளை அந்த வெற்றிடங்கள் காணப்படும் பதவிகளுக்கு நியமிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment