நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28 பீ விஜிதபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (23) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விஜித்தபுர மார்காஸ் தோட்ட கிராமத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே நேற்றிரவு 11 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், மனைவி கணவனை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலக்கம் 28 பீ, விஜிதபுர மார்காஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற இளம் குடும்பஸ்தரும் பிள்ளையொன்றின் தந்தையும் ஆவார்.
சந்தேகநபரான மனைவியை கைது செய்த நுவரெலியா பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், அவரின் உத்தரவின்படி, சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment