மஹியங்கனை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹரவில் பங்கேற்க வந்த 'சீதா' எனும் யானை மீது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த யானை காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார தெரிவித்தார்.
47 வயதான சீதா யானை ஊர்வலத்தில் பங்கேற்ற பின்னர் விஹாரையின் மைதானத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பெரஹரவைக் காண வந்த மக்களின் பாதுகாப்பிற்காக யானையை விரட்டும் நோக்கில் றப்பர் தோட்டாக்களால் சுடப்பட்டதாக சனிக்கிழமை (30) ஊடக அறிக்கை ஒன்றை வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
காட்டு யானை என தவறாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்தியரால் யானைக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில், யானையை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வனிஜீவராசிகள் திணைக்கள அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சின் விசாரணைகளின் பரிந்துரைகளை அடுத்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment