அம்பாறை மாவட்டத்தில் 4,652 ஏக்கர் விவசாய காணிகள் விடுவிப்பு : நில மீட்பு முயற்சியில் வெற்றியென முஷாரப் எம்பி பெருமிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 28, 2023

அம்பாறை மாவட்டத்தில் 4,652 ஏக்கர் விவசாய காணிகள் விடுவிப்பு : நில மீட்பு முயற்சியில் வெற்றியென முஷாரப் எம்பி பெருமிதம்

நிலம் எமது உரிமை, முஸ்லிம்களின் அரசியலின் இலக்காக அம்பாறை மாவட்ட அரசியலின் முக்கிய நோக்காக எது இருக்க வேண்டுமென, எவரும் என்னிடம் வினவினால், நில மீட்பு என்றே பதிலளிப்பேன். இவ்வாறு முஷாரப் எம்.பி. தெரிவித்துள்ளார்.

காணிகள் விடுவிப்பது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

முஷர்ரப் எம்பியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 4652 ஏக்கர் காணிகளை வன விலங்குகள் வன பரிபாலன திணைக்களம் சுவீகரித்தது.

இந்த காணிகளை மீட்டெடுக்க விவசாயிகள் மேற்கொண்ட பிரயத்தனங்கள், கஸ்டங்களை நான் அறிவேன். இதனால், இவர்களின் காணிகளை விடுவிப்பதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சித்தேன். 

பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து விவசாயிகள் முதற்கொண்டு HEO நிறுவனம் உள்ளிட்ட முக்கிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதற்காக பணியாற்றினோம்.

அடிக்கடி அதிகாரிகள் மாறல் மற்றும் அமைச்சுக்கள் மாறல் போன்ற காரணங்களால், மீண்டும் மீண்டும் முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில்தான், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வட்டமடு, வளத்தாப்பிட்டி, வேகாமம், கிரான்கோவை, பள்ளியடிவட்டை, உடகோவை, மதீனாநகர், ஹிஜ்ரத் நகர், புதுவெளி, புலிபிடித்த சேனை, கச்சக்கொடி, துக்வெள்ள, செங்காமம், தங்கப்பிள்ளை கனத்தை, பூவரசையடி, கிரான்கோமாரி, செல்வவெளி, முதுரைதீவு, பெரிய முருங்கந்தனை, கூனப்பன்கேணி, கலுகொல்ல, ஆத்தியடித் தோட்டம், ஒலுவில் அஸ்ரப் நகர் போன்ற அம்பாறை மாவட்டத்தின் சகல காணிகளையும் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளன.

அம்பாறை கச்சேரியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

உரிமை அரசியலில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியாது என்று ஆரூடம் கூறியோர் உள்ளிட்ட சகலருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.அறூஸ்)

No comments:

Post a Comment