மூன்று மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு : 22 பேர் பலி, 17 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

மூன்று மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு : 22 பேர் பலி, 17 பேர் காயம்

(எம்.வை.எம்.சியாம், செ.சுபதர்ஷனி)

கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகங்களின்போது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். குற்றவாளிகள் தொடர்பில் சரியான தரவு முறைமை இன்மையே குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் எனவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் எனவும் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் வகிபாகம் எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, குற்றவாளிகள் தொடர்பில் சரியான தரவு முறைமை இன்மையே இந்த நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம். கடந்த 10 வருடங்களில் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரின் முழுமையான விபரங்களைக் கொண்ட தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைபாடுகள் உள்ளன. இதன் காரணமாகவே குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் சட்டத்திடமிருந்தும், பொலிஸாரிடமிருந்தும் தப்பித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த 3 மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றுள் மேல் மாகாணத்தில் மாத்திரம் 16 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், தென் மாகாணத்தில் 10 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 9 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரில் இருவர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட இந்த பாதாள குழுக்களுக்கு இடையில் போதைப் பொருள் சம்பந்தமான தகராறுகள், தனிப்பட்ட குரோதங்கள் காரணமாக பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பழிவாங்கும் நோக்கில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 துப்பாக்கி பிரயோகங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், சந்தேகநபர்களை கைது செய்யவும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். வெளிநாட்டில் இருந்துகொண்டு நாட்டில் பாதாள குழுக்களை செயற்படுத்தும் தரப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து நீண்ட காலத்துக்கு மறைந்து வாழ முடியாது. நிச்சயம் கைது செய்யப்படுவார். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment