கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி ஆகழ்வு இடைநிறுத்தம் : இதுவரை 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 15, 2023

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி ஆகழ்வு இடைநிறுத்தம் : இதுவரை 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு

முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப் பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டு வந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
இந்நிலையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் தாம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தாம் தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் கெங்காதரன் முன்னிலையில், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ன.

குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளில் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கத் தகடொன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 17 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளின் நிறைவில், குறித்த மனிதப் புதைகுழி ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி காணொளி எடுக்கப்பட்டதுடன், (பிளாஸ்டிக்) விரிப்புக் கொண்டு மூடப்பட்டது. குறித்த விரிப்பின் விளிம்புப் பகுதிகளில் மண் இடப்பட்டுள்ளன.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க முல்லைத்தீவு இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோர் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்திற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment