இன்றையதினம் (27) இலங்கையின் இரு வெவ்வேறு நீதிமன்றங்களால் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொன்ற சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்னவினால் குறித்த சந்கேநபர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் களுத்துறை தெற்கு கலீல் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு இடம்பெற்று வந்தது.
மொஹமட் செயின் மொஹமட் ஹம்சா (46), அப்துல் கரீம் மொஹமட் ரயீஸ்தீன் (49), மொஹமட் பௌஸ் மொஹமட் (59), மொஹமட் ரியாஸ்தீன் மொஹமட் (45), மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஜின்னா (47), மொஹமட் ஜிப்ரி மொஹமட் பிரதௌஸ் (43), மொஹமட் ஷாஹீர் மொஹமட் சியாம் (44), மொஹமட் நிலாப்தீன் மொஹமட் அஜீல் (45) ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் களுத்துறை, மஹா ஹீனடியங்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்.
சுமார் 20 வருடங்களாக இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் இத்தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், களுத்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெரோயின் கடத்திய 5 பேருக்கு தூக்கு!
மீன்பிடிப் படகொன்றில் 151 கிலோ கிராமி ற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் வைத்து மீன்பிடிக் கப்பல் ஒன்றில் 151 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரத்மலானை பகுதியை அண்மித்த கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த ஹெரோயின் போதைப் பொருளை, தலா 25 கிலோ கிராம் கொண்ட 8 பொதிகளில், மீன்பிடி படகில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு பெட்டிகளில் மறைத்து வைத்து கடத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம் (27) தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாமல் பண்டார பலல்லே, பிரதிவாதிகளுக்கு எதிராக அரச தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன் ஏதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி கேட்டபோது, எந்தவோரு தண்டனையையும் ஏற்கத் தயார் எனவும், ஏனைய நான்கு பிரதிவாதிகளையும் விடுதலை செய்யுமாறு முதலாவது பிரதிவாதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் அப்பாவி மீனவர்கள் எனவும் இந்தக் குற்றத்துக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் ஏனைய நான்கு பிரதிவாதிகளும் இதன்போது தெரிவித்திருந்தனர்.
அனைத்து விடயங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment