(இராஜதுரை ஹஷான்)
தூரநோக்கமற்ற வகையில் அரசாங்கம் இறக்குமதிகள் மீதான தடைகளை நீக்குகிறது. இதன் விளைவு கடந்த ஆண்டை காட்டிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் கடந்த ஆண்டு இறக்குமதிகள் மீது தடை விதிக்கப்பட்டது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம். கைவசம் போதுமான அளவு டொலர் உள்ளது என குறிப்பிட்டுக் கொண்டு இறக்குமதி மீதான தடைகளை அரசாங்கம் கட்டம் கட்டமாக தளர்த்தி வருகிறது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி 240 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டன. மலர்கள், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், வட்டக்காய், கரட், போஞ்சி, கோவா உள்ளிட்ட மரகறிகள், மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, பப்பாசி, மெங்கூஸ் உள்ளிட் பழவகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் மரவள்ளி கிழக்கு, வற்றாளை கிழங்கு என்பனவற்றையும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மரகரிகள், பழங்கள், கிழங்கு வகைகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லையா ?
அதேபோல் கடந்த மாதம் 09 ஆம் திகதி ஒரு சில பொருட்கள் மீதான தடை நீக்கத்தில் குடிநீர் போத்தல்கள், யோகட் மற்றும் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காணப்படுகின்றன. இலங்கையில் குடிநீருக்கு ஏதும் தட்டுப்பாடு உள்ளதா என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால்தான் கடந்த வருடம் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பாரிய நெருக்கடி தோற்றம் பெற்றது. தூரநோக்கமற்ற வகையில் அரசாங்கம் தற்போது இறக்குமதிகள் மீதான தடைகளை நீக்குகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், மரக்கறிகள் ஆகிவற்றுக்கு முன்னுரிமை வழங்காமல் அவற்றை இறக்குமதி செய்தால் தேசிய தொழிற்றுறை பாதிக்கப்படும். பலர் தொழில் வாய்ப்புக்களை இழப்பார்கள். இதனால் நாட்டில் தொழிலின்மை வீதம் சடுதியாக அதிகரித்து அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment