சப்ரகமுவ மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன் சகல பிரிவுகளையும் ஆராயும் நோக்கில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
சப்ரகமுவ மாகாண சபையின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (24) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதில் பிஎஸ்/சிஎஸ்ஈ/00/1/4/2 ஆம் இலக்க மற்றும் 2018 ஒக்டோபர் 12ஆம் திகதி ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் ஊடாக ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் கொடுப்பனவு மற்றொருவருக்கு வழங்க எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்காத சூழலில், ஆளுநர் நாட்டில் இல்லாமல் வெளியில் இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட 725,000 ரூபா எரிபொருள் கொடுப்பனவை அவருடைய தனிப்பட்ட செயலாளர் பெற்றுக் கொண்டமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் செயலகத்திற்குச் சொந்தமான இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, காப்புறுதி நிறுவனம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப் பெறாமல், பழுது பார்ப்பதற்காக தனியார் திருத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை கோபா குழுவிடம் அளிக்குமாறு குழு பரிந்துரை செய்தது.
அத்துடன், மாகாண சபைக்குத் தேவையான வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் வெளிநாடு செல்வதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதும் இங்கு தெரியவந்தது.
முதலமைச்சர் அமைச்சினால் புஸ்ஸல்ல பயிற்சி நிலையத்தில் ஐந்து மாடிகள் கொண்ட தங்குமிடத்தை நிர்மாணித்தமை குறித்தும், கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தியமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட முற்பணத்தில் 24,702,328 ரூபா இதுவரை மீளப் பெறப்படவில்லை என்பது குறித்தும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட சங்கங்களால் நடுவர் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பதில் ஈடுபடும் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளுக்காக நடுவர் கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் தமக்கு அதிகாரம் இருப்பதாகவும், இந்தப் பணியை மேற்கொள்வது விடுமுறை தினங்களில் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவ்வாறு பணிகளை மேற்கொள்வது அதிகாரிகளுக்கு லாபகரமானது என அங்கிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மாதாந்தம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் தொகை வழங்கப்பட்டுவரும் போது, மாகாண நிர்வாகத் திணைக்களமும் 5000 ரூபா வரம்பிற்கு உட்பட்டு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு வழங்குவது குறித்தும் குழு கேள்வி எழுப்பியது.
உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்துடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, முதிதா பிரிஷாந்தி, மஞ்சுளா திஸாநாயக்க, சஹன் பிரதீப் விதான, ஜயந்த கெடகொட, சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் (டாக்டர் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment