பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.08.25 ஆம் திகதி கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது அழைக்கப்பட்டிருந்தனர்.
தொழிற் சந்தைக்கு பொருத்தமான பாடநெறிகளை அறிமுகப்படுத்துதல்
இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள கோப் குழுவின் பரிந்துரைக்கு அமைய தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு கலைப் பீடத்திலும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதற்கான தகுதியான விரிவுரையாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு 15 பல்கலைக்கழகங்களில் புதிய கணினி ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கலைப் பாடத்திற்குப் பதிலாக உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்குமாறு அறிவுறுத்தல்
நவீன தொழிற் சந்தையை நோக்கும் போது, கலைப் பாடங்களுக்குப் பதிலாக விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைக்கு அதிக வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
மாணவர்களுக்கு உயர்தரத்தில் விஞ்ஞானத் துறை பாடங்களைத் தொடர்வதற்குத் தேவை இருந்தாலும் பாடசாலை மட்டத்தில் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை பெரும் சிக்கலுக்குரியது என இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தகவல்கள் பற்றிய சரியான தரவுகள் இல்லாமை சிக்கலானது எனவும், சரியான தரவு முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
எதிர்காலத்தில் STEM கல்வி வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளை வகைப்படுத்தி இது தொடர்பில் நிர்வாகரீதியான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் எனச் செயலாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளை வகைப்படுத்தி தேவையான வளங்களை பகிர்ந்து கொள்வதற்கு, தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளை ஒரே குழுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகளின் தரத்தை பரிசீலித்தல் உள்ளிட்ட சிக்கல்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தீர்வுகளை முன்மொழியுமாறு பணிப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிகாரங்கள் 2012 வர்த்தமானிப் பத்திரம் மூலம் கல்வி அமைச்சுக்கு கையகப்படுத்தியிருப்பதனால், தற்பொழுது அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்கமைய, அரச பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்களையும் மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து கையகப்படுத்தினால், அது இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைக் கையகப்படுத்தல், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகளின் தரத்தை பரிசீலித்தல் மற்றும் இந்தப் பல்கலைக்கழகளை பதிவுசெய்தல் செய்தல் தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களுக்கு மூன்று மாதங்களில் தீர்வுகளை முன்மொழியுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, மாவட்ட தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்புகளை அதிகரித்தல், ஏழு வருட விடுமுறை பெற்று கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடு செல்லும் கல்விசார் பணியாளர்கள் மீண்டும் சேவைக்கு வருகை தராத சந்தர்ப்பத்தில் பிணை அறவிடுதல் தொடர்பான விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, சஞ்சீவ எதிரிமான்ன, பிரேம்நாத் சி. தொலவத்த, உபுல் மாஹேந்திர ராஜபக்ஷ மற்றும் மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment