இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 1, 2023

இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது - பாதுகாப்பு செயலாளர்

“சர்வதேச ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சீனா உண்மையான நண்பனாக இருந்து எங்களுடன் தோளோடு தோள் நின்று, எங்களுக்குத் தேவையான பரிந்துரைகளையும் ஆதரவையும் வழங்கியது” என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 96வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் உரையாற்றும்போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால இரு தரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் குணரத்ன, வலுவான இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா தனது ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இலங்கையும் சீனாவும் பிராந்தியத்திலும் உலகிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பெரிதாக மதிக்கின்றன. இந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரை சீனத் தூதுவரான கி சென்ஹோங் வரவேற்றார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், சீன மக்கள் விடுதலை இராணுவம் அதன் தொடக்கத்திலிருந்து நவீன மற்றும் சக்திவாய்ந்த சக்தியாக அதன் தற்போதைய கட்டமைப்பு வரை மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பயணம், அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் சீனாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும் எனத் தெரிவித்தார்

மேலும், யுத்த காலப்பகுதியில் சீனாவினால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

நமது தேசத்தின் நல்வாழ்வுக்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய நமது பயணத்தில் பெரும் பங்காற்றியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி, முன்னாள் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பு அதிகாரி, சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் வோ, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment