கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் : மீண்டும் வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 1, 2023

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் : மீண்டும் வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.

"இந்த விரிவாக்கம், நமது தேசத்தின் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, நேரக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமான கல்வி, உத்தரவாதமான வேலை வாய்ப்புகளை அனுபவிக்கும் இணையற்ற வாய்ப்பை வழங்கும்." என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவெவயிலுள்ள தெற்கு வளாகத்தில் (ஜூலை 28) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், தெற்கு வளாகமானது எட்டு வருடங்களைக் கொண்ட ஒரு குறுகிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும், நமது நாட்டில் அதன் தாக்கம் ஆழமானதாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கெடெட் அதிகாரிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கெடெட் மெஸ், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி தொகுதி திறந்து வைக்கும் நிகழ்விலும், ஆய்வு சஞ்சிகை மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

பேராசிரியர் லலித் டி சில்வா 'ஜேர்னல் ஒப் பில்ட் என்வைமென்ட்' என்ற சஞ்சிகை வெளியீட்டுக்கான பிரதான உரையையும் பேராசிரியர் சமன் யாப்பா தொழில்துறை சஞ்சிகை வெளியீட்டுக்கான பிரதான உரையையும் நிகழ்த்தினர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஊழியர்களின் சேவைகளைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் தனது உரையின் போது," ஒரு ஆராய்ச்சி கலாச்சாரம் மற்றும் அறிவுசார் ஆர்வத்தை வளர்ப்பதில் உங்கள் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது" என்று கூறினார்.

தரமான கல்வியின் மூலம் எமது இளைஞர்களின் மனதை தொடர்ந்து அபிவிருத்தி செய்து வளர்த்து வருவதால், இலங்கைக்கு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் சேவையாற்றும் தொழில்முறை அதிகாரிகளை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். அனைவருக்கும் பிரகாசமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பங்களிக்கிறது." என்றார்.

மாணவர்கள் தங்கள் அறிவு, ஆற்றல்களை விரிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர். இது வளர்ச்சி மற்றும் சுய கண்டுபிடிப்புக்கான வாழ்நாள் பயணம் என்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) தம்மிக்கா விஜயசிங்க, மேலதிக செயலாளர் (பாராளுமன்ற விவகாரங்கள்) இந்திக விஜேகுணவர்தன, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தின் முதல்வர் மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூரிய., சிரேஷ்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment