ஊடகச் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறான எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 8, 2023

ஊடகச் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறான எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

(எம்.ஆர்.எம்.வசீம்)

மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறான எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் விடுத்திருக்கும் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கத்தின் கொள்கைக்கமைய ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலேயே மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் மின் துண்டிப்பின்றி தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மின்சார சபை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மின்சார சபைக்கு தொடர்ச்சியாக ஏற்படும் நட்டத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மின் கட்டணத்தில் உடனடி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அண்மையில் அறிவித்திருந்தது.

அவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளாவிட்டால் இந்த வருடத்தின் எதிர்வரும் மாதங்களில் செலவுகளை முன்னெடுப்பதற்கு முடியாத நிலை ஏற்படும் என்றும் மின்சார சபையின் பொது முகாமையாளர் பி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கடந்த மாதம் 2 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் நூற்றுக்கு 25 வீதத்தால் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment