இலங்கையில் கடுமையான வரட்சி : நீர் நிலைகளை நாடிவரும் வெளிநாட்டு பறவைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

இலங்கையில் கடுமையான வரட்சி : நீர் நிலைகளை நாடிவரும் வெளிநாட்டு பறவைகள்

காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதுடன் வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

மேலும் இம்மாதம் வரட்சி நிலையிலும் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. 
ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. வலசை வந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. 23 இற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, கூழைக்கடா, பாம்புத்தாரா ,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப் பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர பல ஆயிரம் குடும்பங்கள் இம்மாவட்டங்களில் வறட்சி நிலைமையினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மேற்குறித்த பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வரட்சி காரணமாக ஏரிகள், ஓடைகள், குளங்கள் வற்றி வருகின்றன. இங்குள்ள பிரதான நீர்ப்பாசன குளங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாகவும் அதிக வெயில் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால் அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.

தொடரும் வரட்சி நிலைமை காரணமாக பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன இம்மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

கால்நடைகளுக்குரிய பச்சைப் புற்கள் சில பகுதிகளில் தற்போது கருகிய நிலையில் காணப்படுவதாகவும், கால்நடைகள் குடிதண்ணீர் இன்றி அலைந்து திரிவதாகவும் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்று குழாய் மூலமான குடிதண்ணீரைப் பெற்றுத்தர துறைசார்ந்தவர்கள் உடன் முன்வரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment