நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தொழிற்படையின் ஆர்வம், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனித வளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ், மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் Action Unity Lanka என்பன இணைந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை மட்/மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் மாவட்டச் செயலாளரின் வழி காட்டலில் மாபெரும் தொழில் சந்தை நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் தொழில் சந்தை நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட தனியார்த் துறை உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
இனங்காணப்பட்ட 1000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுடன் இணைந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள விரும்பும் தொழில் தேடுனர்கள் உரிய தினத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தங்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை NVQ தொழில் கல்வி வாய்ப்பையும், சுய தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டலையும், Psychometric Test அடிப்படையிலான தொழில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலையும் பெற்றுக் கொள்ள முடியும்.
மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்கள மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இவ்வருடத்துக்கான வேலைத்திட்டத்தில் இதுவரை பத்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரதேச தொழில் சந்தையும் (Divisional Job Fair) மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தொழில் சந்தையும் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று பலருக்கு தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
நாட்டிற்கு சுமையில்லாத ஊழியர் படையில் ஒருவராக தொழிலற்ற இளைஞர், யுவதிகளும் இணைந்து கொள்ள விரும்பினால் இத்தொழில் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு நீங்களும் பயன்பெற முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் தேடுகின்ற இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி ஏனையோரும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
எம்.எஸ்.எம். நூறுதீன்
No comments:
Post a Comment