எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கமைய, துமிந்த நாகமுவவை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பொன்றில் துமிந்த நாகமுவ வௌியிட்ட கருத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.
ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவொன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முதலீடு செய்துள்ளதாகவும், அதனுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கும் தொடர்புள்ளதாகவும் துமிந்த நாகமுவ வௌியிட்ட கருத்து தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துமிந்த நாகமுவவிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வேண்டியுள்ள போதிலும், அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியாமை, அவரை தொடர்புகொள்ள முடியாமை ஆகிய காரணங்களால் அவரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய, முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவிற்கு, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment