வடக்கு, கிழக்கு சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

வடக்கு, கிழக்கு சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் - விமல் வீரவன்ச

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினமாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து சபையில் பேசுவது இல்லை. தமிழ், முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதைப்போல் சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இவர் இன்றுதான் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம், பிரச்சினையொன்றும் இல்லை என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பிரதிநிதிகளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையா? திஸ்ஸ விகாரை பிரச்சினை, முல்லைத்தீவு குருந்தூர் பிரச்சினை என பல பிரச்சினைகள் காணப்படுகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன அடிப்படையில் வேறுபாடு காண்பிக்காமல் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். அது தவறு. இப்பிரதேசங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த சபையில் எவரும் பேசுவது இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டாம் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பிரச்சினைகள் குறித்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால்தான் இன்று விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றுதான் இவர் பேச ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் அதில் பிரச்சினையொன்றும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment