கல்முனை மாநகர சபை நிதி மோசடி : கைதான இருவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 10, 2023

கல்முனை மாநகர சபை நிதி மோசடி : கைதான இருவருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆஜர்படுத்தப்பட்ட இரு சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 07.08.2023ஆம் திகதியன்று சாய்ந்தமருதுப் பகுதியில் வைத்து கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் தற்காலிக சிற்றூழியர்களாகக் கடமையாற்றிய இரு சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர்.

முஹம்மது நகீப் அஸ்மத் சஹி (வயது-25) மற்றும் அப்துல் கரீம் முஹம்மது பர்சான் (வயது-26) ஆகிய இருவருமே கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளில் வரி அறவீடு செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைதானவர்கள் முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த வரி மோசடியுடன் தொடர்புடைய பல நபர்கள் கைது செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊழியர்களின் சேவைக் காலத்தில் வரியிறுப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா? என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்பந்தப்பட்டிருக்கின்றனரா? என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த நிதிக் கையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் கல்முனை பொலிஸ் நிலையம், அம்பாறை விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment