மக்களாணை இருந்தால் தேர்தலை விரைவாக நடத்துங்கள் - ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 1, 2023

மக்களாணை இருந்தால் தேர்தலை விரைவாக நடத்துங்கள் - ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என நாட்டு மக்கள் எவரும் குறிப்பிடவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். மக்களாணை இருந்தால் தேர்தலை விரைவாக நடத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அரசுக்கு சவால் விடுத்தார்.

நாவல பகுதியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலவச சுகாதாரத்துறை இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. யுத்த காலத்தில்கூட இவ்வாறான அவல நிலை தோற்றம் பெறவில்லை. இலவச சுகாதார சேவையை நம்பியுள்ள மக்கள் அரச வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளார்கள்.

மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடயங்களை வெளிப்படுத்தும்போது அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் சுகாதார அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியிடுகிறது. சுகாதார துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வங்குரோத்துக்கு பின்னரும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என மக்கள் குறிப்பிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்புக்கு இன்னும் 365 நாட்கள் உள்ளன. மக்களாணை இருக்குமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, அரசாங்கம் வெகுவிரைவில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment