கடனை மீட்பதற்கான இலக்கு 400 மில்லியன் ரூபாவை தாண்டும் : தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை - News View

About Us

Add+Banner

Wednesday, August 9, 2023

demo-image

கடனை மீட்பதற்கான இலக்கு 400 மில்லியன் ரூபாவை தாண்டும் : தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

365804681_673211744827585_1091463487712506636_n
அடுத்த சில மாதங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப் பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும் என அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அதிகார சபை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 1½ வருடங்களுக்கு முன்னர் கடன் மீளப் பெறுதலில் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தற்போது மாதாந்த இலக்கான 300 மில்லியன் கடன் வசூலை தாண்டியுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக மேலும் கூறியதாவது, “சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடன் மீளப் பெறுதலில் கீழே இருந்தோம். அதாவது ஒரு மாதத்தில் 154 மில்லியன் வசூலிக்க முடிந்தது. தற்போதைய வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வருகையின் பின்னர், அவரது ஆலோசனை மற்றும் தலைவரின் வழிகாட்டலின் கீழ் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

அதன்படி, எங்கள் மாவட்ட பொது முகாமையாளர்கள் அவ்வப்போது கூடி, ஆலோசனைகள் வழங்கி, வாரந்தோறும் அவர்களிடம் அறிக்கை பெற்று தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டது.

இதன் விளைவாக, மாதாந்திர கடன் மீளப் பெறும் இலக்கு 276 மில்லியனாக அதிகரித்துள்ளது. பின்னர் அது 280 மில்லியனாக உயர்த்தப்பட்டது. அடுத்து 300 மில்லியனை எட்டினோம். இப்போது 400 மில்லியன் இலக்கு கொடுத்துள்ளோம். தற்போது, ஒட்டு மொத்தமாக 300 மில்லியன் ரூபாயை கடந்துள்ளோம். கடந்த மாதம் 314 மில்லியன் ரூபா இலக்கை எட்ட முடிந்துள்ளது.

அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவின் கண்காணிப்பு காரணமாக இதை எங்களால் சாதிக்க முடிந்தது. மேலும் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடனை மீளப் பெறுதலில் இடம்பெற்ற மோசடியான நிலைமைகள் பற்றி அண்மையில் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். தற்போது, நிலைமையை தணித்து வருகிறோம். இது தொடர்பாக களத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடன் மீளப் பெறுதலில் மோசடி செய்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி, பலர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி செய்யப்பட்டது அரசின் பணம். இவர்கள் மீது, பொது நிதியை முறைகேடு செய்ததாகவும், போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை எடுக்கப்படும். அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது விளக்கமறியலில் இருக்க வேண்டும்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இப்போதும் களத்தில் சோதனை நடத்தி வருகிறோம். இதன் விளைவாக, கடன் மீளப் பெறுதல் முன்னேற்றத்தை 300 மில்லியன் இலக்குக்கு கொண்டு செல்ல முடிந்தது. கடன் மீளப் பெறுதல் நல்ல நிலையை எட்டியதால், மக்கள் தற்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *