(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் சப்பரகமுவ, வடமேல் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்குரிய 18 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
27 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 485 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21 ஆயிரத்தி 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, சேருவில, குச்சவெளி, வெருகல், மூதூர், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவுகளில் 2 ஆயிரத்து 747 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மேல் மாகாணத்தில் குருணாகல், பமுனகொட்டுவ, கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்து 726 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 655 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நாட்டிற்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியமில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
No comments:
Post a Comment